மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய கிழக்குமாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) மாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜராமய விகாராதிபதியும் போதிராஜராமய கல்வி கலாசார மன்றத்தின் தலைவருமான உவதென்னே சுமணதேரோ பார்வையிட்டுள்ளார்.
நேற்றைய தினம் (16) பிள்ளையானை பார்வையிடுவதற்காக சிறைச்சாலைக்கு விஜயம் செய்த தேரர் அவருடன் சில மணிநேரம் பேசியுள்ளார்.
இதன்போது அவர் கருத்து தெரிவக்கையில்,
தைப்பொங்கலையொட்டியே பிள்ளையானைப் பார்வையிட்டோம். அவரது நலன்கள் குறித்து கேட்டறிந்து கொண்டோம்.
பிள்ளையான் ஒரு சாதாரண மனிதர் அல்ல அவர் ஒரு முன்னாள் முதலமைச்சர். அவர் உள்ளே இருக்க வேண்டியவர் அல்ல.
அவர் வெளியே இருந்து நிறைய பணிகளை மக்களுக்காக செய்ய வேண்டியவர். சமாதானத்தையும் ஒற்றுமையையும் கிழக்கிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
இங்குதான் மூன்று சமூகங்களும் நிம்மதியாக வாழ்கின்றன. அத்தைகைய சமாதான முன்னெடுப்புகளுக்கெல்லாம் பிள்ளையான் போன்றவர்கள் தேவைப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில், நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 04 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.